வீடுகள் மீது வாகனங்கள் சாயும் ஆபத்து
வடமதுரை: வடமதுரை பிலாத்தில் ரோடு வளைவில் மண் இறங்குவதால் வீடுகள் மீது வாகனங்கள் சாயும் ஆபத்து உள்ளது.
பிலாத்து தென்னம்பட்டி ரோட்டில் மந்தைக்குளம் வளைவு பகுதியில் இருந்த கல் பாலம் சிதைந்தது. ஊராட்சி சார்பில் தற்காலிக ஏற்பாடாக ரோட்டின் குறுக்கே பள்ளம் தோண்டி இரும்புக் குழாய் பதித்து மண்ணை நிரப்பி மூடினர். இங்கு நெடுஞ்சாலைத்துறையினர் கவனம் செலுத்தி ஸ்திரமான தார் ரோடாக மாற்றவில்லை.
தென்னம்பட்டியில் இருந்து கொம்பேறிபட்டி, சித்துவார்பட்டி, ஏ.கோம்பை பகுதியை இணைக்கும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் பஸ்கள், லாரிகள் ஏராளமாக செல்கிறது. இதனால் ரோடு வளைவில் மண் கொட்டிய பகுதி பள்ளமாக மாறுகிறது.
ரோடு வளைவு என்பதால் வாகனங்கள் வீடுகளின் மீது சாய்ந்து விடும் ஆபத்து இருக்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்போர் அச்சத்துடன் உள்ளனர். இங்கு குழாய் பதித்த பகுதியை ஸ்திரமாக மாற்றுவதுடன் நிரந்தர தீர்வாக உயர்மட்ட பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.