நெருக்கடி தேவகோட்டையில் போலீஸ் பற்றாக்குறையால் போக்குவரத்தை கட்டுப்படுத்த கூட முடியவில்லை

தேவகோட்டை: போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறையால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது உட்பட சட்ட ஒழுங்கை பராமரிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

தேவகோட்டை போலீஸ் துணை கோட்டத்தில் தேவகோட்டை நகர், தாலுகா, ஆறாவயல், திருவேகம்புத்துார், வேலாயுதம்பட்டினம்உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. தேவகோட்டை நகரை தவிர மற்ற ஸ்டேஷன்கள் கிராம பகுதி தான். போலீஸ் குறிப்பு படி 400 கிராமங்கள் உள்ளன. சிவப்பு மார்க் ஆபத்தான கிராமங்களும் உள்ளன. இந்த நிலையில் நகர் ஸ்டேஷன் உட்பட அனைத்து ஸ்டேஷன்களிலும் 25 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் போலீசார் மட்டுமே பணியாற்று கின்றனர்.

பதிவேட்டின் படி இருக்கும் போலீசாரில் எஸ். பி. தனிப்பிரிவு, உளவு பிரிவு, டிஎஸ்.பி. அலுவலக பணி என சென்று உள்ளனர். போதாக்குறைக்கு எந்த பகுதிக்கு விஐபிக்கள் வருகை முக்கிய கோயில் விழாக்கள் இருந்தாலும் பாதுகாப்பு பணிக்கு சென்று விடுகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் இருப்பதில்லை. பெரும்பாலும் ஊர் காவல் படை தான் நகரை காவல் காக்கின்றனர். அதுவும் கிராமங்களுக்கு இல்லை.

பற்றாக்குறையால் பாதிப்பு:

தேவகோட்டை பகுதியில் திருட்டுக்கள், மோதல் அதிகளவு நடைபெறும் .விபத்துக்கள், போக்குவரத்து விதிமீறல் என சட்டத்துக்கு புறம்பான செயல் அதிகம் நடைபெறுவது வாடிக்கையாக இருந்தாலும் கூட போலீசார் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நெருக்கடியான காலை மாலை நேரங்களில் முக்கிய பிரிவுகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போலீசார் இல்லை.

குறிப்பாக மாலை நேரங்களில் ரோந்து பணி செய்வதற்காக போலீசாரை கூடுதலாக மாவட்ட எஸ். பி. நியமிக்க வேண்டும். தீபாவளி நெருங்கி விட்ட நிலையில் ஆயுதப்படை போலீசாரை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement