புதுச்சேரியில் தங்க கட்டி விற்பதாக கூறி ரூ. 2.5 கோடி மோசடி: 11 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கக்கட்டி விற்பதாக கூறி ரூ. 2.5 கோடி மோசடியில் ஈடுபட்ட 11 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த அந்துவான் சம்பந்த் குமார் மகன் பிரவீன் அலெக்சாண்டர், 32; எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக்கல் கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 2018ம் ஆண்டு புதுச்சேரி நகரப் பகுதியில் இருந்து தனது 2 சொத்துக்களை விற்பனை செய்தார். இதையறிந்த அவர்களது நண்பர்களான லாஸ்பேட்டை, நாவற்குளத்தை சேர்ந்த பாரதி, கணேஷ்குமார், முதலியார்பேட்டை கவுதம் ஆகியோர் அலெக்சாண்டரை தொடர்பு கொண்டு, சென்னையில் தனக்கு தெரிந்த நபர்கள் குறைந்த விலையில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்து வருவதாகவும், அதனை வாங்கி நீங்கள் விற்பனை செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளனர்.

மேலும், சென்னையில் இருந்து அவர்களை புதுச்சேரி அழைத்து வந்து, அலெக்சாண்டரிடம் அறிமுகப்படுத்தியுள்ளனர். அப்போது, அதில் இருந்த இரண்டு நபர்கள், தாங்கள் வருமான வரித்துறை மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கக்கட்டிகளை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து அலெக்சாண்டர் முதலில் 350 கிராம் தங்கக்கட்டியை வாங்கி விற்பனை செய்தார். பின், 500 கிராம் தங்கக்கட்டிகளை வாங்கி விற்பனை செய்தபோது அதிக லாபம் கிடைத்ததால், அவர்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, அந்த கும்பல் தங்களிடம் 6 கிலோ தங்கக்கட்டி இருப்பதாகவும், அதனை மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளது.

இதையடுத்து, அலெக்சாண்டர் தன்னிடம் இருந்த ரூ. 2.5 கோடி பணத்தை அவர்களிடம் லாஸ்பேட்டை நாவற்குளத்தில் வைத்து கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த கும்பல் அதன்பின் தங்கக் கட்டியையும், வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து பிரவீன் அலெக்சாண்டர் சி.பி.சி.ஐ., போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த பாலாஜி, துளசிதாஸ், புதுச்சேரி, லாஸ்பேட்டை நாவற்குளத்தை சேர்ந்த பாரதி, கணேஷ்குமார், லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்த ராஜா, முதலியார்பேட்டைச் சேர்ந்த கவுதம், சென்னை, திருவள்ளூர் மாதவரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த பிரகாஷ், பாக்கியலட்சுமி, தினேஷ்குமார், சென்னை சூளையை சேர்ந்த மகேஷ் ஆகிய 11 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement