குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தை கண்காணிக்க சிறப்பு பிரிவை அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நமது நிருபர்

கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட குழந்தை தொழிலாளர் தடை சட்டத்தை, 2016ல் மத்திய அரசு திருத்தி அமைத்தது. இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நிறுவனங்களில் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டது.

1986ம் ஆண்டு சட்டத்தில், பீடி சுருட்டும் தொழில்கள் போன்ற குடும்ப தொழில்களில் குழந்தைகளை பயன்படுத்த இருந்த சில விதிகளை எதிர்த்து, கடந்த 2009ல் 'ஹெல்த் பார் மில்லியன்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நீதிபதிகள் எஸ்.வி.என். பாத்தி, என்.வி.அஞ்சாரியா விசாரித்தார். அவர்கள் பிறப்பித்த உத்தரவு:

* குழந்தை தொழிலாளர்கள் விவகாரத்தில், 2016லேயே மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவந்து, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான வேலைகளிலும் அமர்த்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

* இந்த சட்ட கட்டமைப்பை மிகக் கடுமையாக அமல்படுத்துவதே இப்போதைய முக்கிய தேவை. குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும்.

* சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கும், சட்ட அமலாக்க முகமைகளை கண்காணிப்பதற்கும், அந்தந்த மாநில தலைமைச் செயலர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்க வேண்டும்.

* கடந்த 2016ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தங்கள் காகித வடிவில் மட்டும் இல்லாமல், கள அளவில் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டு குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement