'மலைபாதை வாகன இயக்கத்தை கட்டுப்படுத்தணும்': பள்ளியில் நடந்த கருத்தரங்கில் தகவல்

கோத்தகிரி:'நீலகிரி மலைப்பாதைகள், ஒரு குறிப்பிட்ட அளவு எடையை மட்டும் தாங்கும் திறன் கொண்டவை; இதில் அதிகரித்து வரும் வாகன இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி மிளிதேன் அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், காலநிலை மாற்றம் குறித்த, சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஷைனி மேத்யூ தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:

காலநிலை மாற்றம் குறித்து, 25 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் எச்சரித்தும் வீணாகி போனது வருத்தம் அளிக்கிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில் நேபாளத்தில் நடந்த மிகப்பெரிய நிலச்சரிவுக்கு, காலநிலை மாற்றத்தின் தாக்கம் தான் காரணம்.

நேபாளத்தில், மலைப்பகுதி, பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள இயற்கை அமைப்பு ஆகும். அதேபோல, நீலகிரி மாவட்டமும், பாறைகளும் மண்ணும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள இயற்கை அமைப்பு ஆகும்.

புவி வெப்பம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, நேபாளத்தில் பனிக் கட்டி உருகியதால், பாறைகள் பிடிப்பின்றி உருண்டு வந்து மிகப்பெரிய பேரிடரை உருவாக்கி உள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையில், பாறைகளுக்கு, மண்ணுக்கும் இடையே உள்ள பிணைப்பு தளர்ந்து பெரும் சேதத்தை உண்டாக்கி உள்ளது.

நேபாள பேரிடரின் போது மழையே பெய்யவில்லை. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த காலங்களை போல அதிதீவிர கன மழை பெய்யவில்லை. ஆனால், பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மலைப்பாதைகள், ஒரு குறிப்பிட்ட அளவு எடையை மட்டும் தாங்கும் திறன் கொண்டவை.

ஒவ்வொரு நாளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் குறிப்பாக, சுற்றுலா வாகனங்கள் கடந்து செல்வதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். இதனால், கனரக மற்றும் பிற வாகன இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அரசும், மக்களும் நீலகிரியை எப்படி காப்பாற்றலாம் என்பது குறித்து, தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியை சுஜாதா வரவேற்றார். ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

Advertisement