அரசு பஸ்களில் தாமத பயணம்: மக்கள் அவதி

குன்னுார்: குன்னுார் மலைபாதை மூடப்பட்டுள்ளதால், கோத்தகிரி வழியாக திருப்பி விடும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், பழுதான அரசு பஸ்களில் தாமத பயணத்தால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

குன்னுார் பர்லியார் பகுதியில் பாறைகள் விழுந்ததுடன் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது கோத்தகிரி சாலை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் வாகன நெரிசல் அதிகரித்து, ஆம்புலன்ஸ், பஸ்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய தவறுவதாகவும், குறுகலான சாலைகளில் வாகனங்கள் சிக்கி தவிப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு பஸ்கள், போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே பழுதடைந்து நிற்பது வாடிக்கையாக உள்ளது.

இதே போல, கோவையில் இருந்து குன்னுார் வழியாக, ஊட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், 5 மணி நேரத்திற்கு மேல் பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த பஸ்கள் குன்னுார் வழியாக வந்த போது கல்லார், பர்லியார் பகுதிகளில் உணவுக்காக நிறுத்தி வந்தனர்.

தற்போது, கோத்தகிரி வழியாக வரும் போது எங்கும் நிறுத்தாமல் வருவதால் பயணிகள் அவதியடைகின்றனர்.

இதேபோல காலை, 7:45 மணியில் இருந்து 9:00 மணி வரை, குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு ஓரிரு பஸ்களை மட்டும் இயக்குவதால், கூட்ட நெரிசலில் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, மலை பாதையில் புதிய பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement