கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை நீட்டிப்பு பணி தாமதம்: ரூ.3.92 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க, ஆறு மாதங்களுக்கு முன், 3.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை பணிகள் தொடங்கப்படாதது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை, தினசரி பல்லாயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
அங்கு, மொத்தம் நான்கு நடைமேடைகள் உள்ளன. அவற்றில், இரண்டாம் நடைமேடை மட்டும், 510 மீட்டர் நீளம் கொண்டது.
மற்ற மூன்று நடைமேடைகளும், 410 மீட்டர் நீளம் கொண்டவை. மூன்று நடைமேடைகளும், புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்ல போதுமானதாக இருந்தாலும், விரைவு ரயில்கள் நின்று செல்ல போதுமானதாக இல்லை.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், தற்போது சர்க்கார் விரைவு ரயில் மட்டும் நின்று செல்கிறது. ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி அந்த ரயில் செல்லும் போது, இரண்டாவது நடைமேடையில் நின்று செல்கிறது.
அதே ரயில், சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் போது, மூன்றாவது நடைமேடையில் நின்று செல்கிறது.
மூன்றாவது நடைமேடை போதுமானதாக இல்லாததால், கடைசி நான்கு பெட்டிகள், நடைமேடைக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், முதியோர் மற்றும் கர்ப்பிணியர், நடைமேடையை கடந்து நிற்கும் பெட்டிகளில் ஏறி, இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதனால், நடைமேடைகளை நீட்டிக்க வேண்டும் என, ரயில் பயணியர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பயனாக, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தின், மூன்றாம் மற்றும் நான்காம் நடைமேடைகளை, 100 மீட்டர் நீட்டிக்க, ஆறு மாதங்களுக்கு முன், 3.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ‘டெண்டர்’ விடப்பட்டது.
ஆனால், இதுநாள் வரை பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. உடனடியாக பணிகளை தொடங்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு