புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

அரூர்: தீபாவளியை முன்னிட்டு, நேற்று புழுதியூர் வாரச்சந்தையில், 2.70 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையாகின.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தைக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:00 மணி முதலே, 1,500க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்போரும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம், ராசிபுரம், தர்மபுரி, பொம்மிடி, காரிமங்கலம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதில், 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 10,500 முதல், 11,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 1,000 முதல், 1,500 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனையானது.
சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 400 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 47,000 முதல், 68,000 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 9,000 முதல், 35,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், மாடுகள், 90 லட்சம் ரூபாய், ஆடுகள், 1.80 கோடி ரூபாய் என, மொத்தம், 2.70 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
சந்தையில் கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 450 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று விலை அதிகரித்து, கிலோ, 550 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement