சம்பளம் கேட்டு பஞ்., ஆபீஸ் முன் துாய்மை பணியாளர் தர்ணா

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அருகே, 3 மாதம் சம்பளம் வழங்கக்கேட்டு துாய்மை பணியாளர், தன் கண்களில் கறுப்பு துணி கட்டிக்கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி நொச்சிகுட்டையை சேர்ந்தவர் வேலுமணி, 45. கடந்த, 13 ஆண்டுகளாக தாளநத்தம் ஊராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சுப்பிரமணிக்கு அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டை பணம் இல்லாததால் பாதி மட்டும் கட்டியுள்ளார். இதனால் அதிகாரிகள் வீடு முழுவதும் கட்டி விட்டு, முழுத்தொகையை பெற்று கொள்ளவும். இல்லையெனில் அரசு வழங்கிய தொகையை திருப்பி செலுத்த கூறினர். அவரால் செலுத்த முடியாத நிலையில், மகன் வேலுமணியின், சம்பளத்தை, ஊராட்சி நிர்வாகம் கடந்த, 3 மாதங்களாக வழங்கவில்லை.
இதுகுறித்து வேலுமணி, பி.டி.ஓ., மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. விரக்தியடைந்த வேலுமணி நேற்று காலை, 11:00 மணியளவில் தாளநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன், தன் கண்ணை கறுப்பு துணியால் கட்டிக்கொண்டு சம்பளம் கேட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம், கடத்துார் பி.டி.ஓ., கலைச்செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் சம்பளம் வழங்கக்கேட்டு வேலுமணி கதறி அழுதார். இதையடுத்து துாய்மை பணியாளர் வேலுமணிக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பி.டி.ஓ., கலைச்செல்வி தெரிவித்ததால், வேலுமணி, தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

Advertisement