மருத்துவமனை வளாத்தில் உருவான திடீர் குளம்

பல்லடம்: பல்லடம், திருச்சி ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

சில தினங்களுக்கு முன் பெய்த மழையின்போது, பெண்கள் வார்டுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் அவசரமாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். நள்ளிரவில் நடந்த இச்சம்பவத்தால் நோயாளிகள் மட்டுமின்றி மருத்துவமனை ஊழியர்களும் அவதிக்குள்ளாகினர்.

மருத்துவமனை நுழைவாயில் பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதும், முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததும் தண்ணீர் தேங்குவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. கனமழையின்போது தேங்கும் தண்ணீர் வார்டுகளுக்குள்ளும் புகுந்துவிடுகிறது.

எனவே, மருத்துவமனை வளாகத்தின் தரைமட்டத்தை உயர்த்துவதுடன், மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் முறையான வடிகால் அமைக்க வேண்டும். ஒவ்வொரு மழைக்கும் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement