சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

–சிறப்பு நிருபர்–

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்துச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் சீர்கேடுகள் தொடர்பான புகார்களைக் களைந்து நிர்வாகத்தை முறைப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது:

அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் முன் வைத்த வாதம்:

பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் இருந்தபோது அனைத்து வரவு-செலவு கணக்கு வழக்குகளும் முறையாகப் பராமரிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கனகசபையில் நின்று வழிபாடு நடத்துவது மற்றும் அதுதொடர்பாக 2022ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்குகள் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் முன் இருந்த முதன்மையான பிரச்னைகள்.

கோவிலை நிர்வகிப்பதற்கு என தனியாக எந்தவொரு நிர்வாகக் குழுவையும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் முன் வைக்கப்படவே இல்லை.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, ‘‘கோவிலின் கனகசபைக்குள் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு பொது தீட்சிதர்கள் அனுமதிப்பதில்லை. எந்தவொரு விவகாரத்திலும் அவர்கள் முறையாகக் கணக்குகளைக் காட்டுவதில்லை,’’ என, வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. பொது தீட்சிதர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement