சிவன் கோவிலில் பாடல்கள் பாடுவதில் தகராறு: தாய், மகள் மீது வழக்கு

சேலம்: சுகவவேஸ்வரர் கோவிலில் பாடல்கள் பாடுவதில் ஏற்பட்ட தகராறில், தாய், மகள் மீது வழக்குப்
பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் ரமணிகாந்தன். இவர் கடந்த, 2ல், சேலம் டவுன் போலீசில் அளித்த புகார் மனு:சுகவனேஸ்வரர் கோவிலில் தினமும், 5 கால பூஜை நடக்கிறது. கடந்த, 2ல் சுவாமி பல்லக்கில் சுற்றிவந்தபோது, அங்கு தரிசன வசதிக்கு தடுப்பு கயிறு கட்டப்பட்டிருந்தது. அப்போது அம்மாபேட்டை, பெரியகிணறு தெருவை சேர்ந்த தாட்சாயிணி, 45, அவரது, 13 வயது மகள், கத்தரிக்கோல், கத்தியால் கயிற்றை அறுத்து உள்ளே வந்தனர். அதுகுறித்து பக்தர்கள் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்து, 'போக்சோ' வழக்கில் நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டினார். தாய், மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாட்சாயிணி, அவரது மகள் மீது, 5 பிரிவுகளில், நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த, 2 இரவு, 8:30 மணிக்கு சுகவனேஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜையின்போது, நந்தி மண்டபத்தில் சிவனடியார்கள், தேவாரம், திருவாசகம் பாடினர். அதேநேரத்தில் தாட்சாயிணி, அவரது மகள், சினிமா பக்தி பாடல்களை உரத்த குரலில் பாடினர். இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதுகுறித்து சிவனடியார்கள், 'பள்ளியறை பூஜையின்போது திருவாசகம் பாடுவதே ஆகம விதி. அதற்கு மாறாக தாட்சாயிணி தரப்பினர், திரைப்பட பால்களை பாடினர்' என குற்றம்சாட்டினர்.
மேலும் பள்ளியறை பூஜையில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக, பல்லக்கு துாக்கி வந்த தலைமை அர்ச்சகர் பிரசன்னா மற்றும் செக்யூரிட்டியை, தாட்சாயிணி தள்ளிவிட்டுள்ளார். இதில் அதிருப்தி அடைந்த பக்தர்கள், தாட்சாயிணியை வெளியே வரவிடாமல், பிரகாரத்தை மூடி கோவில் நுழைவாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்
படுத்தி அனுப்பி வைத்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்ஸ்பெக்டருக்கு 'கடி'
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு தாட்சாயிணி தரப்பினர், பூஜைக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றனர். இதனால் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று, தாட்சாயிணி, அவரது மகள்களை வெளியே அழைத்து வந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் மீனாம்பிகையின் கையை கடித்து விட்டு, தாட்சாயிணி சென்றார். இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement