அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். செயலாளர் கல்யாணசுந்தரம், வருவாய் துறை அலுவலர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கனகவல்லி, சமூகநலத்துறை பணியாளர் சங்க மாநில செயலாளர் காந்திமதி, மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் பெருமாள், மாநில துணை தலைவர் தினேஷ் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக சங்கம் வைத்து போராடுவதற்கு எதிராகவும், அலுவல் சாரா கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்றும், தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடாது என்றும் வெளியிட்டுள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை இயக்குனரின் சுற்றறிக்கை, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பெரும்பகுதி இளைஞர் ஆதரவால் ஆட்சிக்கு வந்துள்ள, த.வெ.க., அரசு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், அரசு பணி நியமனங்களை மேற்கொள்ளும் என நம்பி இருந்த நிலையில், இளைஞர்களின் எதிர்கால கனவுகளை சிதைக்கும் வகையில், ஓ.எம்.சி.எல்., என்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் நிறுவனம் மூலம், அரசு பணிக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆட்கள் எடுக்கப்படும் என, அரசிதழில் வெளியிட்டுள்ளது, சமூக நீதிக்கு எதிரானது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Advertisement