கனரக வாகனங்கள் ஓசூர் நகருக்குள் செல்ல தடை கூட்ட நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை

ஓசூர்: நகரில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், கனரக வாகனங்கள் ஓசூர் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஓசூரில், சரக்கு லாரிகள் போக்குவரத்து சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில், ஓசூர் டி.எஸ்.பி., சுதிர் தலைமை வகித்து பேசியதாவது:ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், லாரி மற்றும் இதர கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, எஸ்.டி.ஆர்.ஆர்., எனப்படும் 'சாட்டிலைட் அவுட்டர் ரிங் ரோடு' வழியாக, கனரக வாகனங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அச்சாலை, தயார் நிலையில் இருப்பதால், பாகலுாரிலிருந்து ஓசூர் நோக்கி வரும் கனரக வாகனங்கள், எஸ்.டி.ஆர்.ஆர்., சாலை மூலம் பேரண்டப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, சென்னைக்கும், தேன்கனிகோட்டை, தளி, மைசூர், ஆனேக்கல், ராயக்கோட்டை, தர்மபுரி, சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி வரும் கனரக வாகனங்கள் எஸ்.டி.ஆர்.ஆர்., சாலை மூலம் பேரண்டப்பள்ளி வழியாக தேன்கனிகோட்டை, தளி, மைசூர், ஆனேக்கல், பாகலுார், மாலுார், கோலார், ஹைதராபாத் ஆகிய ஊர்களுக்கு செல்லலாம். சேலத்திலிருந்து ஓசூர் நோக்கி வரும் கனரக வாகனங்கள் பைரமங்கலத்திலிருந்து எஸ்.டி.ஆர்.ஆர்., சாலை வழியாக பேரண்டப்பள்ளி, பாகலுார், மாலுார், ஒசக்கோட்டா, ஓயிட்பீல்டு, ஹைதராபாத் ஆகிய ஊர்களுக்கு செல்லலாம். அதேபோல, ராயக்கோட்டையிலிருந்து கெலமங்கலம் வழியாக தேன்கனிகோட்டை, தளி, ஆனேக்கல், மைசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லாம்.
மத்திகிரி சந்திப்பு - தேன்கனிக்கோட்டையிலிருந்து வரும் கனரக வாகனங்கள், சிப்காட் -1க்கு செல்ல அந்திவாடி சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி, இன்னர் ரிங் ரோடு வழியாக செல்லலாம். சேலம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் கெலமங்கலம் வழியாக ராயக்கோட்டை மற்றும் எஸ்.டி.ஆர்.ஆர்., சாலையை பயன்படுத்தி பேரண்டப்பள்ளி வழியாக செல்ல வேண்டும்.
சிப்காட் சந்திப்பு - பெங்களூருவில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கிருஷ்ணகிரி, பாகலுார், ராயக்கோட்டை மற்றும் சேலம் பகுதிகளுக்கு செல்ல பேரண்டப்பள்ளி எஸ்.டி.ஆர்.ஆர்., சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டும். சிப்காட் 1லிருந்து வெளிவரும் கனரக வாகனங்கள் சிப்காட் மெயின் ரோடு வழியாக சிப்காட் சந்திப்பிற்கு வந்து செல்ல வேண்டும். அகர்வால் சந்திப்பு சாலைக்கு வர அனுமதியில்லை.
அதேபோல முனீஸ்வர் நகர் சந்திப்பிலிருந்து, 100 அடி சாலை வழியாக வாசன் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆர்.சி., சர்ச் சந்திப்பு மற்றும் அசோக் பில்லர் சந்திப்பு சாலையிலிருந்து ஓசூர் நகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அமேரியா பெட்ரோல் பங்க் சந்திப்பிலிருந்து ராயக்கோட்டை சாலை வழியாக செல்லவும் அனுமதியில்லை. காலை, 7:00 மணி முதல் இரவு, 10 மணி வரை, ஓசூர் நகருக்கள் கனரக வாகனங்கள் வந்து செல்லவும் அனுமதியில்லை. இந்த விதிமுறைகள் நாளை(இன்று) முதல் அமலுக்கு வருகிறது. கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement