முருங்கை கிலோ ரூ.110 க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்: முகூர்த்த சீசன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை அதிகரித்து ரூ.110க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக செடிகளில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் முருங்கை விளைச்சல் பாதிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்தும் வரத்தில்லை. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை நாள்தோறும் அதிகரித்தபடி இருந்தது.

இதற்கிடையில் சுப விழாக்கள் காரணமாக தேவை பன்மடங்கு அதிகரித்தது. வியாபாரிகளின் கொள்முதல் அளவிற்கு ஏற்ப வரத்து இல்லாததால் விலையும் கணிசமாக உயர்ந்தது. தீபாவளிக்கு முன்பு கிலோ ரூ.63க்கு விற்ற கரும்பு முருங்கை நேற்று ரூ.110க்கு விற்பனை ஆனது.

வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘வரும் நாட்களில் முருங்கை வரத்து இன்னும் குறையும் என்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.

Advertisement