தடைகளை உடைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா: மாணவர்களிடையே பிரதமர் மோடி பெருமிதம்

கரக்பூர்: ‘கடந்த 12 ஆண்டுகளில், தடைகளை உடைத்து நாட்டின் திறன்களை வெளிக்கொண்டு வந்து, புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது’ என கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி.,யின் பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

நாட்டின் முதல் ஐ.ஐ.டி.,யான மேற்கு வங்கத்தின் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நடந்த பவள விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தடைகளை உடைத்து, புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா உலகுக்கு தெளிவாக அறிவித்துள்ளது. மக்களின் மனநிலையில் உள்ள தடைகளை உடைக்கும்போதுதான் நாட்டின் திறன்களை முழுமையாக வெளிக்கொண்டு வர முடியும். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா இதை நிரூபித்துள்ளது.

வறுமையிலிருந்து, 50 கோடி மக்களை மீட்டுள்ளோம். இதை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையும் தெரிவிக்கிறது. இது சாதாரண சாதனை அல்ல. தடைகளை உடைக்க வேண்டும் என்ற மனநிலையின் விளைவு. முன்பு வறுமையை ஒழிப்பது பற்றி பேசினர்; ஆனால், கோப்புகளை உருவாக்கியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

ஆட்சி என்பது பிறருக்கு அதிகாரம் அளிப்பதற்கான கருவியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அணுகுமுறை. செமிகண்டக்டர் எனப்படும் மின்னணு சிப் தயாரிப்பிலும், விண்வெளி துறைகளிலும் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தொழில் தொடங்க முன்வந்தது. அதற்கு சிவப்புக் கொடி காட்டி வெளியேற்றினர். எங்கள் அரசில் செமிகண்டக்டர் திட்டத்தை அறிவித்தபோதும், வாய்ப்பை இந்தியா ஏற்கனவே இழந்துவிட்டதாக சிலர் கூறினர். ஆனால், நாங்கள் திட்டத்தை தொடங்கி சிப்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளோம்.

அதே போல் தனியார் நிறுவனங்களை விண்வெளித் துறையில் பங்கேற்க அனுமதித்தோம். அதனால் இளைஞர்களுக்கும் புதிய தொழில்முனைவோருக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஐ.ஐ.டி., கரக்பூரின் முன்னாள் மாணவர் பவன் குமார் சந்தனாதொடங்கிய ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு காலத்தில் எதெல்லாம் நம் நாட்டினால் சாத்தியமில்லை எனக் கருதப்பட்டதோ, அவை இன்று நிஜமாகி வருகின்றன.

மாட்டு வண்டி காலத்திலிருந்து புல்லட் ரயில் காலத்துக்கும், தபால் கடிதங்களிலிருந்து சமூக வலைதள செய்திகளுக்கும் இந்தியா முன்னேறியுள்ளது. சிப்கள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலையை எட்ட உள்ளோம்.

மாணவர்கள் நாட்டுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஐ.டி., பவள விழாவின் ஒரு பகுதியாக 'வளர்ந்த பாரதத்துக்கான, 75 குரல்கள்' என்ற நிகழ்ச்சியின் கீழ் ஐ.ஐ.டி., கரக்பூரைச் சேர்ந்த 75 சிறந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களின் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

ஐ.ஐ.டி., கரக்பூரின் பவள விழாவைக் குறிக்கும் வகையில், 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு வெள்ளி நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

பாலம் திறப்பு





இதைத் தொடர்ந்து பீஹார் மாநிலம் வைஷாலி சென்ற பிரதமர் மோடி, அங்கு கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறு வழிச்சாலை பாலத்தை திறந்து வைத்தார். பீஹார் முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், 'நிதிஷ் சேது' என அழைக்கப்படுகிறது.

ஹாஜிபூரில் நடந்த திறப்பு விழாவில் பீஹார் கவர்னர் சையத் அதா ஹஸ்னைன், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சம்ராட் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பாலம் பாட்னாவில் உள்ள கச்சி தர்காவையும், வைஷாலி மாவட்டத்தில் உள்ள பிடுபூரையும் இணைக்கிறது. 4,280 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், 9.76 கி.மீ., நீளம் கொண்டது. இருபுறமும் மொத்தம் 10 கி.மீ.,க்கு அணுகு சாலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் வாய்ப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

@block_B@

ஐ.ஐ.டி.,க்கு ரூ.50 கோடி



நிதி: கூகுள் அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்த, மேற்கு வங்கத்தில் உள்ள ஐ.ஐ.டி., கரக்பூருக்கு 50 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஐ.டி., கரக்பூரின் முன்னாள் மாணவரும், கூகுள் தலைமைச் செயல் அதிகாரியுமான சுந்தர் பிச்சை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.block_B

Advertisement