சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியில் தானியங்கி கட்டண முறை அமல்

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியில், தடையற்ற தானியங்கி கட்டண முறை, நேற்று (நவ.,20) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுதும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தடை மற்றும் நெரிசலை குறைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக, வாகனங்கள் சுங்கச்சாவடியில் நின்றோ அல்லது வேகத்தை குறைத்தோ, கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த நவீன தொழில்நுட்பம், பரனுார் சுங்கச்சாவடியில், கடந்த ஜூலை 31ம் தேதி நள்ளிரவு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அடுத்து, ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள நெமிலி சுங்கச் சாவடியில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. மூன்றாவதாக, ராணிப்பேட்டை மாவட்டம், சென்னை – பெங்களூரு வழித்தடத்தில், முக்கியத்துவம் வாய்ந்த சென்னசமுத்திரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, நவீன தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண வசூல், நேற்று செயல்பாட்டிற்கு வந்தது.

இதன் காரணமாக, இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல் சென்றன. குறுகிய சாலையில், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய முறையால், போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க முடிந்தது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Advertisement