ஊழலால் சமூகம் சீரழிந்த போது மவுனம் காத்தவர்கள் பட்டாசு மாசு குறித்து பேசுவதா? உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆவேசம்

8

லக்னோ: ”ஊழலால் சமூகம் சீரழிந்தபோது மவுனம் சாதித்தவர்கள், பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட மாசு குறித்து வாய் திறப்பது ஏன்?” என, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்னோவில், விவசாயிகளுக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ், 4,300 பேருக்கு நிதியுதவியை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வழங்கினார். அரசுப் பணியில் புதிதாக சேர்ந்த 1,146 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். அப்போது யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

அரசு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கப்போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தோம். மாநிலம் முழுதும் மக்கள் தீபாவளி பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். பட்டாசுகளை தாராளமாக வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளியால் மாசு அதிகரித்துள்ளதாக பலர் கூறுகின்றனர்; அதிகரித்தால் என்ன? அது, தானாகவே குறைந்துவிடும். இதில், கவலைப்பட என்ன இருக்கிறது.

ஊழல்கள் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தையும், மாசுபடுத்தியவர்களிடம் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், மக்கள் ஒருநாள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், மாசு ஒரு பிரச்னையாகிவிடுகிறது. 2017க்கு முன் ஹோலி, தீபாவளி, விஜயதசமி, ஜென்மாஷ்டமி, சிவராத்திரி, கிறிஸ்துமஸ், ஈத், மகர சங்கராந்தி என எந்த பண்டிகை வந்தாலும், உ.பி.,யில் கலவரங்கள் தொடங்கிவிடும்.

ஒவ்வொரு நபரும், பாதுகாப்பற்ற உணர்வுடன் இருந்தனர். அந்தக் காலக்ட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளால் வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். சந்தைகள் மூடப்பட்டதால் கடைக்காரர்கள் கொண்டு வந்த பொருட்கள் வீணாகின. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில், இங்கு ஊரடங்கும் இல்லை; கலவரங்களும் இல்லை. அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement