ஆடுகளை வெட்டுவது போல மனிதர்களை வெட்டி சாய்க்கின்றனர்: பழனிசாமி ஆவேசம்

3

சேலம்: ''ஆடுகளை வெட்டுவது போல, மனித உயிர்களை வெட்டி சாய்ப்பதை, த.வெ.க., ஆட்சியில் தான் பார்க்கிறோம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் இடைப்பாடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: தீபாவளி அன்று, 11 கொலைகள் நடந்ததாக செய்தி வந்துள்ளது. இதற்கு, அமைச்சர் ராஜ்மோகன், கடந்த ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் நடந்த கொலைகளை பட்டியலிடுகிறார். குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு, போலீசாரை கண்டால் பயப்படவில்லை.

ஆடுகளை வெட்டுவது போல, மனித உயிர்களை வெட்டி சாய்க்கின்றனர். இப்படி நடப்பதை, தவெ.க., ஆட்சியில் தான் பார்க்கிறோம். சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டில், முதல்வர் விஜய் குடியேறினார். அந்த பகுதியில், நேற்று முன்தினம் கொலை நடந்துள்ளது.

நீதிபதிகள், அமைச்சர்கள் வசிக்கும் பகுதியில் கூட, மக்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் மற்ற பகுதியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்? ரவுடிகளை பிடிக்க முயன்ற, இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து ஒரு ரவுடி இழுக்கிறார். ஒரு எஸ்.எஸ்.ஐ.,யை வெட்டி கொன்றனர்.

ஒரு ஆட்சியின் சிறப்பு, ஆறு மாதங்களில் தெரிந்து விடும். கடந்த ஆறு மாதங்களில் கொலை, கொள்ளை தான் நடந்து வருகிறது. எம்.எல்.ஏ., ஒருவர், பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தமிழகத்தில், 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வேலை இழந்த, ஒன்றரை லட்சம் பேரின் குடும்பங்களை, யார் காப்பாற்றுவது? தொழிற்சாலைகளில் குறை இருந்தால், அவகாசம் கொடுத்து சரி செய்ய வேண்டும்.

அதை விட்டு, தொழிற்சாலைகளை மூடினால், எப்படி கடனை திருப்பி செலுத்துவர்? உற்பத்தி நடந்தால் தானே அரசுக்கும் வரி வருவாய் கிடைக்கும்? அதிகார போதையில், தொழிற்சாலைகளை மூடினால், புதிதாக யார் தொடங்குவர்? இதனால் தான், மூன்று பெரிய நிறுவனங்கள் ஆந்திரா சென்றன.

தமிழகத்தில், லஞ்சம் இல்லை என்றால், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பணம் சிக்குவது எப்படி? கடந்த ஆட்சிகளில், பல இடங்களில் லஞ்சம் இருந்தது. இந்த ஆட்சியில், 'டிமாண்ட்' செய்து கேட்கின்றனர்.

'என் பெயரை சொன்னால் அதிகாரிகள் நடுங்குவர்' என முதல்வர் சொன்னார். அவர் பெயரை சொன்னால், அதிகமாக பணம் கேட்பதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Advertisement