நியூயார்க்கில் ராணுவ அணிவகுப்புக்கு தலைமை பொறுப்பு; வம்சாவளி இந்தியர் சுனிதா வில்லியம்ஸ் பெருமிதம்

3

- நமது சிறப்பு நிருபர் -

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் 107வது ஆண்டு முன்னாள் படைவீரர் தின அணிவகுப்பு கோலாகலமாக நடந்தது. இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அணிவகுப்பைத் தலைமை தாங்கி வழி நடத்தினார். சுனிதா வில்லியம்ஸுடன், ஆயிரக்கணக்கான அமெரிக்க முன்னாள் படைவீரர்கள், தற்போது பணியில் உள்ள ராணுவத்தினர், இசைக்குழுக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சுனிதா வில்லியம்ஸ் அணிவகுப்பில் பங்கேற்பதை ஒரு பெரும் கவுரவமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். அவர் பேசியதாவது: நான் ராணுவத்தில் சேர்ந்த போது, ​​ஒரு கட்டத்தில் நானும் ஒரு முன்னாள் படைவீரராக மாறுவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அப்போது நான் மிகவும் இளமையாக இருந்தேன். எனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளப் போகிறேன் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

ராணுவத்தில் நான் எடுத்து வைத்த முதல் அடிகளே, எனது வாழ்க்கையை வழிநடத்துவதற்கான அடித்தளத்தை எனக்குக் காட்டிக் கொடுத்தன; அவை துணிச்சல், கவுரவம் மற்றும் அர்ப்பணிப்பாக கருதுகிறேன். ராணுவத்தில் நான் செலவிட்ட காலத்திற்கும், அங்கிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அந்தப் பாடங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க ஆவலாக இருக்கிறேன். நாம் கனவு கண்டதை விடவும் அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவதைக் காண ஆவலாக உள்ளேன். இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

Advertisement