மல்லுார் ஊருக்குள் வராத பஸ்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகும் மக்கள்

பனமரத்துப்பட்டி: மல்லுார் ஊருக்கு வெளியே, சேலம் - நாமக்கல் நான்கு வழிச்சாலை உள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மல்லுார் வந்து, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர்.

சேலத்தில் இருந்து ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மல்லுார் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் செல்கின்றன. மல்லுார் ஊருக்குள் வந்து செல்வதற்கு, 'பர்மிட்' பெற்ற பஸ்களும் வருவதில்லை.காலையில் சில பஸ்கள், மல்லுார் ஊருக்குள் வந்து செல்கின்றன. இரவு, 7:00 மணிக்கு மேல் புறவழிச்சாலையில் மட்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் இருந்து மல்லுார் வரும் பயணிகளை, மக்கள் நடமாட்டம் குறைந்த புறவழிச்
சாலையில் இறக்கி விட்டு செல்கின்றனர். மேலும் இரவில், நாமக்கல், கரூர், திருச்சி செல்லும் பஸ்களை எதிர்பார்த்து, மல்லுார் ஊருக்குள் கால் கடுக்க பயணியர் காத்திருக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்கு பின், நாமக்கல், கரூர் செல்லும் ஒரு பஸ் ஊருக்குள் வருகிறது. அதிலும் பயணியர் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. அதனால் மல்லுார் ஊருக்குள் பஸ்கள் முறையாக வந்து செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement