உலகம் முழுவதும் பரவி வரும் யோகாவின் செல்வாக்கு; பெங்களூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

நமது நிருபர்

பெங்களூருவில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா அமைப்பின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:பெங்களூருவில் யோகாவின் அற்புதமான ஆற்றலை உணரும் வாய்ப்பு கிடைத்தது. கர்நாடகா, யோகாவுடன் தொடர்புடைய பல ஆசிரியர்களும் அறிஞர்களும் பிறந்த பூமி. பெங்களூருவில், புகழ்பெற்ற கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமார் ஒரு யோகா பயிற்சியாளர். இந்தியா எடுத்த முயற்சியால் தான் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

நான் எந்த நாட்டிற்குச் சென்றாலும், மக்கள் மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது என்னிடம் யோகா குறித்துப் பேசுகிறார்கள். யோகா என்பது இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அடையாளமாக மாறியுள்ளது; பல அரச குடும்பங்கள் இதற்கு முழுமையாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. யோகா ஒரு முக்கியமான விளையாட்டாக மாறியுள்ளது; பல்வேறு நாடுகள் யோகா போட்டிகளை நடத்துகின்றன. யோகாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் பரவி வருகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக, இந்தியா தனது கலாசாரம், அடையாளம், அறிவு மற்றும் அறிவியலை உலகிற்கு நம்பிக்கையுடன் வெளிப்படுத்தியுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிகளை நாங்கள் ஊக்குவித்தோம், இன்று அதன் பலன்களையும் காண்கிறோம். இந்தியாவில் இருந்து ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி சீராக அதிகரித்து வருகிறது. இ-ஆயுஷ் விசாவின் உதவியால், மக்கள் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தை அணுகுவது எளிதாகியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement