தீபாவளி நாளில் இந்தியர்கள் ஆர்டர் செய்தவை; காஜூ கட்லிக்கு முதலிடம்

தீபாவளி நாளில் இந்தியர்கள் ஆன்லைன் தளங்களில் எத்தகைய உணவுப் பண்டங்கள், இனிப்புகளை ஆர்டர் செய்தனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. மசால் தோசை, பன்னீர் பட்டர் மசாலா, காஜு கத்லி ஆகிய மூன்றும், நாடு முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட விருப்ப உணவுகளில் முதலிடத்தில் இருந்தன.

ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் தரவுகளின்படி, அதிகப்படியான பேர் காஜூ கட்லி வாங்கியுள்ளனர். இது, முந்திரி பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு. வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமானது. மும்பை, டில்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட வட மாநில நகரங்கள் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத்திலும் காஜூ கட்லிக்கு நல்ல டிமாண்ட் இருந்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களை லட்டு, ரசகுல்லா, குலாப் ஜாமூன் ஆகியவை பெற்றன. முந்தைய ஆண்டு தீபாவளி விற்பனையுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு தீபாவளி உணவு வினியோக ஆர்டர்களில் 10.7% அதிகரிப்பை ஸ்விக்கி பதிவு செய்துள்ளது.

நவம்பர் 6 முதல் 8 வரையிலான மூன்று நாள் பண்டிகை காலத்தில், சராசரியாக மணிக்கு 97,545 உணவு ஆர்டர்களை ஸ்விகி தளம் வினியோகித்துள்ளது. ஹைதராபாத்தில் ஒரே வாடிக்கையாளர் ரூ.41 ஆயிரத்து 895 மதிப்பிலான 57 பார்சல் இனிப்புகளை ஆர்டர் செய்தார். மும்பை வாடிக்கையாளர் ஒருவர் தீபாவளியன்று ஏழு பார்சல்கள் இனிப்புப் பரிசுப் பெட்டிகளுக்கு ரூ.41 ஆயிரத்து 772 செலவிட்டுள்ளார்.

ஸ்விக்கி டைனவுட்டில் தீபாவளி முன்பதிவுகள் கடந்த ஆண்டைவிட 38.5 சதவீதம் உயர்ந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டில்லி, சென்னை, ஆமதாபாத், ஜெய்ப்பூர், சண்டிகர் நகரங்களில் இந்த உயர்வு இருந்துள்ளது.

Advertisement