ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல் பீர் பாட்டிலால் தாக்கு: 5 பேர் மீது வழக்கு
விருத்தாசலம்: முன்விரோத தகராறில் பஸ்சில் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 16, 14 வயதுடைய மாணவர்கள் சிலருக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 20ம் தேதி பள்ளி முடிந்து, பஸ்சில் ஊருக்கு சென்றபோது, இருவருக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது, பஸ் நிறுத்தியதும் இறங்கிய மாணவர்களில் ஒருவர் கீழே கிடந்த பீர் பாட்டிலால் தாக்கியதில், மற்றொரு மாணவர் தலையில் காயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரு தரப்பு புகார்களின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி , மாணவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிந்து, சிறுவர்கள் இருவரை பிடித்து, கடலுாரில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மற்ற மூவரை தேடிவருகின்றனர்.