காதலியை சந்திக்க 3,200 கி.மீ., ‘பைக்’கில் பயணித்த முதல்வர்
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 1990களில் தன் காதல் மனைவி கீதாவை சந்தித்து பேச, ஹைதராபாதில் இருந்து டில்லிக்கு, 3,200 கி.மீ., துாரம் ‘பைக்’கில் பயணம் செய்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. ஹைதராபாதில் நேற்று (நவ.,20) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “திருமணத்திற்கு முன் உங்கள் மனைவி கீதாவை காதலித்த போது, அவரை சந்திக்க ஹைதராபாதில் இருந்து டில்லிக்கு 3,200 கி.மீ., துாரம் பைக்கில் சென்றிருக்கிறீர்களே. இத்தனை ஆயிரம் கி.மீ., தொலைவை பைக்கில் கடந்து செல்ல உங்களுக்கு எப்படி துணிவு வந்தது?” என, கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரேவந்த் ரெட்டி, ‘‘அது, 90-களின் தனிப்பட்ட கதை. இப்போது பொது மேடையில் அதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? காலில் அடிபட்டால் தான் வலி தெரியும்; அது போல காதலிப்பவர்களுக்குத் தான் காத்திருப்பதன் வேதனை புரியும்,’’ என, புன்னகையுடன் குறிப்பிட்டார்.
இச்சம்பவம், 1990களில் நடந்தது. அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவில் மாணவர் அரசியலில் ஈடுபட்ட ரேவந்த் ரெட்டி, நாகார்ஜுன சாகர் அணை அருகே படகு சவாரியின் போது கீதாவை முதன்முதலில் சந்தித்தார். அந்த சந்திப்பு நட்பாகவும், பின் ஆழமான காதலாகவும் மாறியது.
கீதா, மூத்த காங்., தலைவர் ஜெய்பால் ரெட்டியின் உறவினர். அரசியல் வேறுபாடுகளால் இரு குடும்பங்களிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. இதனால் கீதாவை, டில்லியில் உள்ள அவரது மாமா ஜெய்பால் ரெட்டியிடம் அனுப்பி வைத்தனர்.
காதல் தீவிரமடைந்த நிலையில், ரேவந்த் ரெட்டி ஹைதராபாதில் இருந்து டில்லிக்கு, 1,750 கி.மீ., பைக்கில் பயணம் செய்து, கீதாவை சந்தித்ததுடன், ஜெய்பால் ரெட்டியையும் சந்தித்து தன் விருப்பத்தை விளக்கினார். 3,200 கி.மீ., பைக்கில் கடந்த இந்த பயணம், இரு குடும்பங்களின் ஒப்புதலை பெற உதவியது. இறுதியாக, 1992 மே 7ல் இருவரும் திருமணம் செய்தனர்.