இரு வெவ்வேறு விபத்தில் சோகம்; குஜராத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலி
- நமது நிருபர் -
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ்-காவ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது. மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் உத்தராகண்டை சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து நள்ளிரவில் நிகழ்ந்துள்ளது.
நள்ளிரவு நேரம், அதிகாலை நேரம் பயணத்தை தவிர்ப்பது நல்லது. டிரைவர் சற்று கண் அசந்தாலும், விபத்து நிகழ வாய்ப்புள்ளது. அதிகாலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ராஜஸ்தானில் 9 பேர் பலி
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. குழந்தைகள் உட்பட குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கோட்டா மாவட்ட கலெக்டர் ராஜேஷ் ஜோஷி கூறியதாவது: நள்ளிரவில் 16 பேருடன் சென்ற வாகனம் ஒன்று லாரி மீது மோதியது. யாத்ரீகர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு மஹாராஷ்டிரா திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது, என்றார்.