23 ஆண்டு கால பழைய ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களுக்கு திடீர் சிக்கல்: சி.பி.எஸ்.,க்கு மாற நெருக்கடி

மதுரை: கல்வித்துறையில் 23 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு (சி.பி.எஸ்.,) மாற நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

அரசு ஊழியர், ஆசிரியருக்கு தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் சி.பி.எஸ்., திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை (4 மாதங்கள் பின்) ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டது. இந்த 4 மாதங்களில் பணி நியமனம் செய்யப்பட்டோர் சி.பி.எஸ்.,ல் சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடர அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு விதிப்படி வருங்கால வைப்பு நிதித் தொகையும் பிடித்தம் செய்யப்பட்டது.

சம்பளம் வழங்க ஐ.எப்.ஆர்.எம்.எஸ்., சாப்ட்வேர் நடைமுறைக்கு வந்த பின், 2003 ஏப்., முதல் ஆக., வரை பணியில் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட 'சாப்ட்வேரில்' பழைய ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெறச் செய்யவில்லை. அவர்களை சி.பி.எஸ்., திட்டத்திற்கு மாற அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தில் 23 ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களை சி.பி.எஸ்.,க்கு மாற கட்டாயப்படுத்துவது, அதற்காக சம்பளத்தை நிறுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. சிலர் நீதிமன்றம் சென்று பழைய ஓய்வூதிய திட்டத்தில் நீடிக்க தீர்ப்பும் பெற்றுள்ளனர். அது மீறப்படுகிறது. சாப்ட்வேரில் திருத்தம் செய்து, சம்பளத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement