சமூக நல உறுப்பினர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் நல குழுமத்தில் சமூக நல உறுப்பினர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிகள் படி, இளைஞர் நல குழுமத்திற்கு ஒரு சமூக நல உறுப்பினர் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார்.

விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்வதராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் 6வது தளத்தில் அறை எண் 601ல் இயங்கி வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெற்றுக்கொள்ளலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளம் (https://kallakurichi.nic.in) அல்லது https://dsdcpimms.tn.gov.in ஆகிவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள், இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, முதலாவது தளம், சி.எம்.டி.ஏ., டவர்–2, காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 22ம் தேதி மாலை 5:00 மணிக்கு கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement