ரயிலில் வன்கொடுமை செய்து பெண் கொலை 7 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: ‘நாகர்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, ஏழு நாட்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்’ என, தமிழக டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வாலுக்கு, தேசிய மகளிர் ஆணையம்,‘ நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:

நாகர்கோவில் ரயில் நிலைய சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், பெண் ஒருவர் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தை, தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நாகர்கோவிலில் சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பின், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, அனைத்து ரயில் நிலையங்களிலும், பாதுகாப்பு குறைபாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். நாகர்கோவில் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஏழு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பொது போக்குவரத்து இடங்களில், பெண்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement