வட்டி தள்ளுபடி அரசாணை வெளியாவதில் தாமதம் வீட்டுவசதி சங்கங்களில் வசூல் பணி முடக்கம்
சென்னை: ‘கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில், கூடுதல் சலுகையுடன், அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்’ என அரசு அறிவித்தும், அதற்கான அரசாணை வெளியாகாததால், நிலுவை கடன்கள் வசூல் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நியாயமான விலையில், வீட்டு கடன் கிடைப்பதற்கும், வீட்டு மனைகள் கிடைப்பதற்கும், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் தொடங்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, 680 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் உள்ளன.
இதில், பெரும்பாலான சங்கங்களில், கடன் வாங்கியவர்கள், திருப்பி செலுத்தாததால், நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. இதனால், சங்கங்கள் திவால் ஆகாமல் தடுக்க, அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது.
இதன்படி, நிலுவை தவணை தொகையின் மீதான, அபராத வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, இத்திட்டத்தில் கடன் தொகையை செலுத்தியவர்களில் பலருக்கும், தற்போது வரை, அதற்கான சொத்து பத்திரங்கள் திரும்ப கிடைக்காமல் உள்ளன.
இந்நிலையில், ‘2026 மார்ச், 31 வரை நிலுவையில் உள்ள வீட்டுக்கடன், அடமான கடன் போன்றவற்றுக்கு, தவணைத் தொகை மீதான அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்’ என, ஆக., மாதம் அரசு அறிவித்தது. ஆனால், இதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து, வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட, அபராத வட்டி தள்ளுபடி திட்டம் போன்று இல்லாமல், தற்போது கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வட்டியில், ஒரு சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றபடி அரசாணை வெளியிட வேண்டும்.
இது தொடர்பான கோப்புகள் தயாரிக்கப்பட்ட நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அரசாணை வராததால், வழக்கமான கடன் வசூல் பணிகள் முடங்கியுள்ளன. இது சங்கங்களின் நிதி நிலையை, மேலும் பாதிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.