ஏமாற்றும் வடகிழக்கு பருவமழை நீர்வளத்துறை ஏரிகளில் கடும் வறட்சி
சென்னை: வடகிழக்கு பருவமழை ஏமாற்றி வருவதால், நீர்வளத்துறையின் 1,461 ஏரிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.
மாநிலம் முழுதும், நீர்வளத்துறை பராமரிப்பில் 14 ஆயிரத்து 141 ஏரிகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040 ஏரிகள், சிவகங்கையில் 1,459, மதுரையில் 1,340, புதுக்கோட்டையில் 1,132 ஏரிகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு, தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிக நீர்வரத்து கிடைக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு, மேட்டூர் அணை வாயிலாக நீர்வரத்து கிடைக்கிறது. நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யவில்லை.
வடகிழக்கு பருவமழையும் தற்போது ஏமாற்றி வருகிறது. இதனால், 1,461 ஏரிகள் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
அதிகபட்சமாக மதுரையில் 545 ஏரிகள், திருநெல்வேலியில் 236, சிவகங்கை யில் 139, தஞ்சாவூரில் 75, சேலத்தில், 73, திண்டுக்கலில் 58, நாமக்கலில் 53, தர்மபுரியில் 38, திருச்சியில் 31 ஏரிகள் வறண்டுள்ளன.
இதனால், ஏரிகளை சுற்றியுள்ள பகுதிகளில், பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.