திருக்கச்சூரில் கார்த்திகை தீபம் ஏற்றும் பணி தீவிரம்

சிங்கபெருமாள் கோவில்: திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோவில் மலை மீது, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூரில் பழமையான மருந்தீஸ்வரர் இருள் நீக்கி தாயார் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மலை மீது, 111 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில், தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் மலை மீது தீபம் ஏற்றும் பணி நடந்து வருகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மஹா தீபத்திற்கு தேவையான 3,500 மீட்டர் நீளமுடைய திரியை தயாரித்துள்ளனர்.

அதை தொடர்ந்து மலை மீது விளக்கு ஏற்ற 600 லிட்டர் எண்ணெய் பக்தர்கள் வழங்கியுள்ளனர்.

கார்த்திகை தீப திருநாளில், அதை சுற்றியுள்ள கிராம மக்கள் சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசிப்பர்.

இதனால், பக்தர்களின் வசதிக்காக மறைமலை நகர் நகராட்சி சார்பில், குடிநீர், கழிப்பறை மற்றும் வாகனங்கள் நிறுத்தம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6:00 மணிக்கு மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

Advertisement