நயினார் குளத்தில் படகு சவாரி கழிவுநீர் கலப்பதால் எதிர்ப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் மீண்டும் படகு சவாரியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நயினார் குளத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், படகு சவாரி தொடங்க மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நீர்வளத்துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டு, ‘டேமியன் மரைனர்ஸ்’ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 80 சதவீத வருவாய் நிறுவனத்துக்கும், 20 சதவீதம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழுவுக்கும் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, 2 பேர், 4 பேர் பயணிக்கும், நான்கு மிதிபடகுகள், ஒரு மோட்டார் படகு என மொத்தம், 5 படகுகள் இயக்கப்படுகின்றன. மிதி படகில், 30 நிமிடங்களும், மோட்டார் படகில், 20 நிமிடங்களும் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். காலை, 9:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை படகு சவாரி நடைபெறும்.

இதற்கிடையே, நயினார் குளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாகவும், முதலில் குளத்தை சுத்தப்படுத்தி நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயத்துக்கு பயன்படும் குளத்தை சுற்றுலா தலமாக மாற்றுவதை விட, அதன் நீராதாரத்தை பாதுகாப்பதே முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மணிமுத்தாறு அணையில் வனத்துறை சார்பில் தொடங்கப்பட்ட படகு சவாரி, சில மாதங்களிலேயே கைவிடப்பட்டதை சுட்டிக்காட்டும் அவர்கள், நயினார் குளம் படகு சவாரியும் அதே நிலையை அடையக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, நீர்நிலையை முறையாக பராமரித்த பின், சுற்றுலா நடவடிக்கைகளை தொடர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement