ஒவ்வொரு இந்தியருக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் மோடி அரசு; அமித் ஷா

இட்டா நகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் லோக் பவன் வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செம்மரக் கன்றை நட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப்பதிவு; இந்தியா முழுதும் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் பசுமையான எதிர்காலத்தை மோடி அரசு உருவாக்கி வருகிறது. 2020ல் அருணாச்சலப் பிரதேசத்தின் லோக் பவன் வளாகத்தில் நடப்பட்ட ருத்ராட்ச மரக்கன்று, இன்று முழுமையாக வளர்ந்த மரமாக மாறியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இன்று ஒரு செம்மரக் கன்றை நட்டுள்ளேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, இட்டாநகரில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12வது பட்டாலியன் வளாகத் திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது; இட்டாநகர் மட்டுமல்ல, அருணாச்சலப் பிரதேசம் முழுதிலுமிருந்து வரும் அனைத்து நீச்சல் வீரர்களுக்கும் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் திறக்கப்படும். இது இலவசமாகக் கிடைக்கச் செய்யப்படும். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் எந்தவொரு நீச்சல் வீரராவது பதக்கம் வென்றால், அந்தச் சாதனைக்கான பயணம் இந்த நீச்சல் குளத்திலிருந்தே தொடங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.

Advertisement