ரூ.77 லட்சம் நகை கடன் மோசடி நிதி நிறுவன கிளை மேலாளர் கைது

மேட்டூர்: தனியார் நிதி நிறுவனத்தில், 77 லட்சம் ரூபாய் மோசடி செய்த கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார்.

மேச்சேரி, கூணான்டியூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன், 35. மனைவி, மகள் உள்ளனர்.

சிலம்பரசன் மேச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக பணிபுரிகிறார். அங்கு கடந்த, 19, 20ல், அலுவலர்கள் தணிக்கை மேற்கொண்டனர். அதில் வாடிக்கையாளர்களின் நகை அடமானம் பெற்று கடன் கொடுத்ததும், பின் அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து, தனியே பல்வேறு கணக்குகளில் மீண்டும் அடமானம் வைத்து, பணம் எடுத்து முறைகேடு செய்யப்பட்டதும் தெரிந்தது.
அதன்படி, 703 கிராம் நகை மூலம், 77.07 லட்சம் ரூபாயை, சிலம்பரசன் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நிதி நிறுவன மண்டல மேலாளர் நீலமேகன், நேற்று அளித்த புகாரையடுத்து, மேச்சேரி போலீசார், சிலம்பரசனை கைது செய்து, மோசடி செய்த பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement