படகுகளுக்கு டீசல் செலவை குறைக்க சோலார் அமைப்பு நிறுவ நடவடிக்கை: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

புதுச்சேரி: ஏனாம் பிரந்தியத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உலக மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா, மீன்வளத்துறை அதிகாரி கொந்தையா, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பங்கேற்று, பேசியதாவது:

மீனவ மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி, சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மீன்வளத்துறை மூலம் கல்விக் கட்டணத் திருப்பிச் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது படகுகளுக்கு டீசல் செலவு குறைக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி படகுகளில் சூரியசக்தி மற்றும் காற்றாலை அடிப்படையிலான மின்சார அமைப்புகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடலில் நீண்ட நாட்கள் மீன்பிடிக்கும் பெரிய விசைப்படகுகளில் ரூ.28 லட்சம் மதிப்பில், 3 டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டும் பெட்டிகளை அமைக்க மானியம் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், சிறிய அளவிலான படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 50 முதல் 100 கிலோ வரை மீன்களை பாதுகாக்கும் குளிரூட்டும் வசதிகளை மானியத்துடன் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 ரொக்கமும், 10 கிலோ அரிசியும் வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement